திக்ரி எல்லையில் 5,000 சுவரொட்டிகள்; கண்ணீர் சிந்தும் மகள் - 75 வயது விவசாயி எங்கே?

பஞ்சாப்பில் உள்ள ஏகோலஹா கிராமத்தைச் சேர்ந்த 75 வயதான விவசாயி சோராவர் சிங். இவரை கடந்த குடியரசு தினத்திலிருந்து தொடர்புகொள்ள முடியவில்லை. இவர் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி முதல் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார். 1.5 ஏக்கர் நிலம் கொண்ட குறு விவசாயியான இவர், விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி வரை தனது மகளுடன் தொடர்பில் இருந்தவரை அடுத்த நாள் முதல் தொடர்புகொள்ள முடியவில்லை.

அவரது மகள் பரம்ஜீத் கவுர் இப்போது சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் 5,000 சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். "அவர் நவம்பர் 26 அன்று சிங்கு எல்லைக்குச் சென்றார், அதன்பிறகு திரும்பி வரவில்லை. தனது பகுதியைச் சேர்ந்தவர்களை அணிதிரட்டி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்" என்று அவர் மகள் கூறினார்.

அவரது மகள் மேலும் கூறுகையில், "அக்டோபரில் பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது அதில் கலந்துகொண்டார். அப்போது அவர் தண்டவாளங்களில் படுத்து உறங்கினார். கன்னா ரயில் பாதையில் இருந்து, அவர் ஃபதேஹ்கர் சாஹிப் ரயில் பாதைக்குச் சென்றார். பின்னர் சிங்கு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். நான் அவரிடம் வீட்டிற்கு திரும்பி வரும்படி கோரினேன்.

image

நவம்பர் 26-ம் தேதி அன்று அவர் மற்ற விவசாயிகளுடன் டெல்லி சென்றார். அவர் ஒருபோதும் செல்போனைப் பயன்படுத்தவில்லை. இதனால் அவரைப் பற்றி அண்டை கிராமங்களின் விவசாயிகளிடமிருந்து தெரிந்துகொண்டேன். அவர் சிங்கு எல்லைக்குச் சென்றதிலிருந்து, அவர் திரும்பி வரவில்லை. பல கிராமவாசிகள் சில நாள்கள் வீட்டிற்குச் சென்று மீண்டும் திரும்பி வரும்படி கேட்டார்கள். ஜனவரி 22 அன்று, நானே அவரைச் சந்திக்க சிங்கு எல்லைக்குச் சென்றேன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றவுடன் திரும்பிவருகிறேன் என்று அவர் என்னிடம் கூறினார், அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், நான் அவரைப் பற்றி கவலைப்படக்கூடாது என்றும் என்னிடம் சொன்னார். அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் நான் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன்" என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார் அவரது மகள் பரம்ஜீத்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COMfrom Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்